Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பெரியார் பிறந்த ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் இல்லம் வரை நடைபெறவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தவிருந்த இருசக்கர வாகனப் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதுடன், பெரியார் திடலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அடக்குமுறை கையாளப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது சொந்த மண்ணிலேயே அவரது கொள்கைகளை வலியுறுத்தி நடத்தப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை காரணம் காட்டி இந்த ஆண்டு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், பெரியாரை கொள்கைத் தலைவராக முன்மொழிந்துள்ள தவெக, அவரையும் அவரது பெயரையும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் நாடகத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், செப்டம்பர் 17ஆம் தேதி திராவிடர் கழகம் திட்டமிட்டுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு உடனடியாக அனுமதி வழங்கி, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P