Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 10 நாள் ஆவணி திருவிழாவின் நிறைவு நாளான இன்று தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் நிறைவு நாளில் நடைபெறும் தீர்த்தவாரி உற்சவம் முக்கிய சடங்காக நடைபெறுகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், பிள்ளையாரின் பிரதிநிதியான அஸ்திர தேவர் எனப்படும் அம்பாளும், விநாயகரும் இணைந்த படைக்கலத் தேவர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினார்.
அஸ்திர தேவருக்கு திருமஞ்சனப் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட ஏழு வகையான மங்களப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாராயணங்கள் ஓதப்பட்ட நிலையில் கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அங்குச தேவரை மூன்று முறை திருக்குளத்து நீரில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தினர். பொற்றாமரைக் குளத்தில் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் நிறைவாகவும், இறைவனின் பூரண அருளைப் பெறும் நிகழ்வாகவும் தீர்த்தவாரி கருதப்படுகிறது. பிள்ளையார்பட்டி திருக்குளத்தில் பக்தர்கள் நீராடினால் பாவங்கள் நீங்கி, அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
18 படி அரிசியில் பிரம்மாண்ட முக்குறுணி மோதகம்
தீர்த்தவாரி நிகழ்ச்சி நிறைவடைந்து சுவாமி உச்சிப்பொழுதில் கோவிலுக்குத் திரும்பியதும், பிள்ளையார்பட்டிக்கே உரிய சிறப்பு அம்சமான 18 படி அரிசியால் தயாரிக்கப்படும் பிரம்மாண்ட முக்குறுணி மோதகம் கற்பக விநாயகருக்கு படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து இரவு வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா வந்து, 10 நாட்கள் நடைபெற்ற ஆவணி திருவிழா நிறைவடையும்.
Hindusthan Samachar / P YUVARAJ