Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 22ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார்.
அதில், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையான, வெளிப்படையான மக்கள் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக ரசிகர் மன்றமாகவும், நற்பணி இயக்கமாகவும் செயல்பட்டு வந்த நிலையில், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 2000ஆம் ஆண்டு ரசிகர் மன்றத்திற்கு கொடி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், 2005ஆம் ஆண்டு மதுரையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடனும், தெய்வத்துடனும் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக, 8.33 சதவீத வாக்குகளைப் பெற்று விருத்தாசலம் தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 10.38 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றதாகவும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று, கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றது, தேமுதிக தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த மிகப்பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய நாள் முதல் கழகக் கொடியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள் தேமுதிக தொண்டர்கள்தான் என்றும், தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து கட்சியை வளர்த்த தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக தொடங்கப்பட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை நாளாக அமைந்ததாகவும், அந்த மாநாட்டில் 28 லட்சம் பேர் கலந்து கொண்டது இன்றளவும் வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
என்றென்றும் தங்களுக்கு துணை நின்று கட்சியை வழிநடத்திய புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தை வணங்கி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் எதற்காக கட்சியை தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே தொண்டர்களின் கடமை என்றும், அதற்காக இந்த நாளில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரை தேமுதிக பெற்றுள்ளதாகவும், அதே ஆண்டில் மீண்டும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, கேப்டன் விஜயகாந்தின் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளதாகவும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, தெய்வமாக இருக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ள அவர், கேப்டனின் புகழ், மனிதநேயம், மக்கள் மீதான பற்று, பாசம் மற்றும் கொள்கைகள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்தார், இருந்தார், அனைவரது மனதிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ