Enter your Email Address to subscribe to our newsletters

உடுமலைப்பேட்டை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்த் மீதான தனது ரசிகர் அன்பை வெளிப்படுத்தும் வகையில், ரஜினிகாந்தின் திரைப்பட கதாபாத்திரங்களின் தோற்றத்தில் விநாயகர் சிலைகளை வடிவமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வரும் ரஞ்சித், இந்த ஆண்டு தனது அபிமான நடிகரான ரஜினிகாந்தின் திரைப்பட தோற்றங்களை மையமாகக் கொண்டு சிலைகளை உருவாக்கியுள்ளார்.
அதன்படி, ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்பட கதாபாத்திரத்தின் தோற்றத்திலும், ஜெயிலர் 2 திரைப்பட கதாபாத்திரத்தின் தோற்றத்திலும் விநாயகர் சிலைகளை களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
பின்னர் சிலைகளுக்கு நேர்த்தியாக வண்ணம் தீட்டி, ரஜினிகாந்தின் பிரத்யேக ஸ்டைல்களையும் திரைப்பட தோற்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவற்றை உருவாக்கியுள்ளார்.
ரஜினிகாந்தின் திரைப்பட கதாபாத்திரங்களை விநாயகர் சிலைகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகள், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிலைகளைப் பார்த்து ரசித்து வரும் பொதுமக்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள், மண்பாண்டக் கலைஞர் ரஞ்சித்தின் கலைத்திறனை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பாரம்பரிய மண்பாண்டக் கலையையும் திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தையும் இணைத்து ரஞ்சித் உருவாக்கியுள்ள இந்த வித்தியாசமான விநாயகர் சிலைகள் தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ