Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 14 செப்டம்பர் (ஹி.ச)
முட்டை உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை பெற்று விளங்கும் நாமக்கல் மண்டலத்தில் முட்டைகளுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 ரூபாய் 60 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், அதன்படி விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவனப் பொருட்களான சோளம், சோயா புண்ணாக்கு ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அவசியமாகியுள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர். நாமக்கல்லில் நிர்ணயிக்கப்படும் விலையே தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் முன்னோடியாக இருந்து வரும் நிலையில், இந்த உயர்வு சில்லறை சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தலைநகர் சென்னையில் முட்டை ஒன்றின் சில்லறை விற்பனை விலை 6 ரூபாய் 20 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் இந்த விலையை அறிவித்துள்ளது. போக்குவரத்து செலவு மற்றும் கையாளும் செலவுகள் சேர்க்கப்பட்டு சென்னையில் இந்த விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேவேளையில், கறிக்கோழி பிரியர்களுக்கும் விலை உயர்வு அதிர்ச்சியை அளித்துள்ளது. நாமக்கல் பகுதியில் உயிருள்ள கறிக்கோழி ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 98 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த தட்டுப்பாடு மற்றும் வரத்து குறைவு காரணமாக கறிக்கோழி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b