Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகின் மூத்தக்குடியான தமிழினம், இயற்கையை இறையாகப் போற்றி, மண்ணையும் மரபையும் உயிரெனக் காத்து, தனக்கே உரித்தான பண்பாட்டு வாழ்வியலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிவரும் பெருமைக்குரிய தேசிய இனமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனித வாழ்வின் ஒவ்வொரு தொடக்கமும் நல்வழியில் அமைய வேண்டும், இடையூறுகள் அகல வேண்டும், எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பிள்ளையார் எனும் விநாயகப் பெருமானை வணங்கும் வழக்கம் தமிழர்களின் வாழ்வியலோடு நீண்டகாலமாக பின்னிப் பிணைந்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட உரிமை என்றும், ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை மற்றவர் மதிப்பதும், அவரவர் வழிபாட்டு உரிமையை ஏற்றுக்கொள்வதும், வேறுபட்ட நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வதுமே உயர்ந்த அறம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழர் மண்ணில் தோன்றிய பல்வேறு வழிபாட்டு மரபுகள், விழாக்கள் மற்றும் சடங்குகள் மக்களின் பண்பாட்டு நினைவுகளின் ஒரு பகுதியாக தலைமுறைகளைக் கடந்து தொடர்வதாகவும், அவற்றை மதவெறிக்கும், மனிதர்களைப் பிரிக்கும் அரசியலுக்கும் கருவியாக மாற்றாமல், மக்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்வுகளாகப் பேண வேண்டியது அனைவரின் பொறுப்பு என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகிற்கே மானுடநேயத்தைப் போதித்த தமிழினம், சாதி, மதம் என எந்தப் பெயராலும் பிளவுபடாமல், அன்பாலும் அறத்தாலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய காலம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிள்ளையார் பெருநாளைக் கொண்டாடும் இந்நன்னாளில் தமிழர் வாழ்வில் நிலவும் வறுமை, துயரம், அடிமைத்தனம், அநீதி உள்ளிட்ட அனைத்து இடர்களும் அகல வேண்டும் என்றும், உழைக்கும் மக்களின் இல்லங்களில் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நல்லோர் எண்ணங்கள் வெற்றி பெறவும், தாய்மொழியான தமிழ் செழிக்கவும், தமிழர் நிலம் வளம் பெறவும், தமிழ்த்தேசிய இனம் உலகின் தலைசிறந்த இனமாக உயர்ந்து நிற்கவும் வாழ்த்தியுள்ள சீமான், மண்ணையும், மக்களையும், மொழியையும் நேசித்து வாழும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நன்மையும் நலமும் நிறைந்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P