Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ஆர்கே நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசியல் மற்றும் திரைப்பயணத்தை மையப்படுத்தி 3 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரைப்படத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், வெவ்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதில், விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரத்தைப் போன்ற தோற்றத்தில் ஒரு விநாயகர் சிலையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்ததை சுட்டிக்காட்டும் வகையில் மற்றொரு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் சட்டப்பேரவையில் விஜய் செய்த சைகையை மையப்படுத்தி மூன்றாவது விநாயகர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 விநாயகர் சிலைகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலைகளுக்கு நாளை சிறப்பு பூஜை நடத்தி வழிபாட்டை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
கொடுங்கையூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருவதாக அப்பகுதி தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ராயப்பன் கதாபாத்திரம், மாஸ்டர் திரைப்பட கதாபாத்திரம் மற்றும் லியோ திரைப்பட கதாபாத்திரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டதாக கூறினர்.
கடந்த ஆண்டு 2026-ம் ஆண்டு விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் தோற்றத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டதாகவும், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில், அவரது பயணத்தை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு 3 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ