தமிழ்நாட்டில் விவசாய நில வரி முற்றிலும் ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்
வேலூர், 14 செப்டம்பர் (ஹி.ச.) வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் விவசாய நில வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேலூரில் தனியார் ஓட்டல் திறப்பு நிகழ்ச்சி
செங்கோட்டையன்


வேலூர், 14 செப்டம்பர் (ஹி.ச.)

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் விவசாய நில வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வேலூரில் தனியார் ஓட்டல் திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்தார்.

பின்னர் அரசினர் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் விவசாய நில வரி தற்போது இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் விவசாய நிலங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அந்த வரி தேவையில்லை என்பதால், தமிழக அரசு நில வரியை ரத்து செய்துள்ளது. இதுவரை சுமார் ரூ.28 கோடி அளவிலான நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. முந்தைய காலத்தைவிட தற்போது விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

விவசாய நிலங்களை மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகள் அரசின் ஆணைப்படி செயல்படுத்தப்படும். இதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தனி ஆணையருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வருவாய்த்துறையில் 1,500 நில அளவையர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீன கருவிகள் வாங்கப்பட்டு, விரைவில் அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தை முறையாக அளவீடு செய்து நிர்ணயித்த பின்னரே பட்டா வழங்கப்படும் என்றும் கூறினார்.

இணையவழி வருவாய்த்துறை சேவைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது தவெக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கை உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கின்றனர். இதனால் தங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

லண்டன் பயணம் தொடர்பாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெள்ளை அறிக்கை கேட்பது குறித்த கேள்விக்கு,

வெளியில் இருந்து பேசுவது எளிது,செயல்படுத்துவது கடினம். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க தேவையான கட்டமைப்பு, போக்குவரத்து, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

அவற்றை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் செயல்பாட்டில் தான் தெரியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam