Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
இன்று நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உணவு, செல்போன், பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் சலுகை விலையில் விற்பனை நடைபெறும்.
அந்த வகையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் வி.எம்.சத்திரம் அருகே இயங்கி வரும் ‘திண்டுக்கல் கல்யாண பிரியாணி கடை’ யில் பிரியாணிக்கு சலுகை அறிவிக்கப்பட்டது.
அதற்காக, கடந்த 2 தினங்களுக்கு முன்பு கடையில் ‘பிரியாணி ஆஃபர்’ என விளம்பர பேனர் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் பிள்ளையார், சிக்கன் பிரியாணியை சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது.
இந்து மக்கள் விநாயகரை சைவ கடவுளாக வழிபட்டு வரும் சூழலில் அசைவ உணவை விநாயகர் சமைப்பது போன்று விளம்பர பேனர் வைக்கப்பட்டது அந்த பகுதி மக்களை முகம் சுழிக்க செய்தது.
இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலான நிலையில், இந்து முன்னணியினர் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், காவல்துறையிலும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) போலீசார் அந்த கடைக்கு நேரில் சென்று சர்ச்சையான விளம்பர பேனரை உடனடியாக அகற்றினர்.
மேலும் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இது போன்று விளம்பரங்களை செய்ய வேண்டாம் என கடை உரிமையாளரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நெல்லை நரசிங்கநல்லூர் பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 12ஆம் தேதி காலை வி.எம்.சத்திரம் மேம்பாலம் அருகே சென்றபோது, அங்குள்ள ‘திண்டுக்கல் கல்யாண பிரியாணி கடை’யில் விநாயகர் பிரியாணி சமைப்பது போன்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்துக்களின் வழிபாட்டுக்குரிய கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
எனவே கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரான கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் ஜெயந்த் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN