Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகப் பெருமானின் அவதார திருநாளைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறையில் சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பண்டிகையையொட்டி மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்து வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள், எருக்கம் பூ மாலைகள், வாழை இலைகள், மாவிலை தோரணங்கள், கரும்பு உள்ளிட்ட பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனையும் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் பூஜை பொருட்கள் அடங்கிய காம்போ செட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ஆரஞ்சு, ஆப்பிள், கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பூஜைக்கு தேவையான முக்கிய பொருட்கள் அடங்கிய ஒரு செட் வெறும் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குறைந்த விலை செட் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதி முழுவதும் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b