Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில்,
அண்ணா என்ற மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புதிய சரித்திரத்தைப் படைத்ததாகவும், மாநிலக் கட்சிகளும் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்பதை இந்திய அரசியலுக்கு உணர்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சித் தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்பதை நிலைநிறுத்திய அண்ணா, சாமானியர்களும் ஆட்சியாளர்களாக முடியும் என்ற மக்களாட்சி புரட்சியையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்ததுடன், சமூகநீதியை அரசு திட்டங்களில் செயல்படுத்தியவர் அண்ணா என்றும், மாநில சுயாட்சி என்ற வலிமையான அரசியல் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனித்துவத்துடன் தலைநிமிர வழிகாட்டியவர் என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடம் செல், உன்னால் முடியும் தம்பி, அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள் போன்ற அண்ணாவின் பிரசாரக் கருத்துகளே தன்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அறிவியல் மாணவனான தமக்கு ஆசிரியர்களில் மூத்தவராக பேரறிஞர் அண்ணாவே எப்போதும் வழிகாட்டியாக இருப்பதாகக் கூறியுள்ள ஆதவ் அர்ஜுனா, அண்ணாவின் பிறந்தநாளான இன்று அவரது கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம் என்றும், அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம் என்றும் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ