Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில்,
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற இந்த அரசின் அறிவிப்பை எதிர்த்து மீனவ கிராம மக்கள் அவசரக் கூட்டம் கூட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இடத்தில் மிகப்பெரிய அரசுக் கட்டடம் அமைவதால் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே பாதிப்பு ஏற்படும்!
புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள பகுதியில் ஏறக்குறைய 30000 மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயில்கிறார்கள். குறுகலான சாலை வசதிகள் உள்ள இடம் என்பதால் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு உள்ளதா? அவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் செல்வார்களா?
அரசுத் தகவலின் அடிப்படையில் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் அப்பகுதியில் கடல் நீர் சூழும் அபாயம் உள்ளது. இந்த வகையில் பார்த்தால் 50 ஆண்டுகளுக்குக் கூட இக்கட்டிடம் நிலைக்காது என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள்.
மீனவர்கள் பூர்வீகமாக வாழும் பகுதி! அவர்கள் படகுகளை நிறுத்த, மீன்களை உலர்த்த எவ்விதமான தடைகளும் வராது என அரசு உறுதி அளிக்குமா?
2004ஆம் ஆண்டு சுனாமி வந்த இடம்.
Coastal Regulation Zone(CRZ) கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் Zone 2க்குள் இப்பகுதி வருகிறது. இங்கே 20000 சதுர அடியில் கட்டிடம் கட்டுவதே ஆபத்தானது.
கஜானா காலி என்று சொல்லிவிட்டு இவ்வளவு கோடியில் இது தேவையா? அதுவும் விஜய் வீடு அருகில்! அவருக்காக கட்டுகிறாரா?
தலைமைச் செயலகத்துக்காகவே கட்டப்பட்ட கட்டடத்தின் இன்றைய நிலை என்ன?
ஓமந்தூரார் மருத்துவமனையில் எத்தனை Floor பயன்பாட்டில் உள்ளது?
பயன்பாட்டில் இல்லாத பகுதிகள் சுகாதாரமாக பாதுகாக்கப்படுகின்றனவா? சில ஆண்டுகளுக்கு முன்னர் அது பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாக மாறி இருந்தது. பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
பெரும்பாலான இடம் அங்கே பயன்பாடில்லாமல் இருக்கிறது. அவ்விடத்தை தலைமைச் செயலகமாக பயன்படுத்த வேண்டும். மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக பட்டினப்பாக்கத்திற்கு மாறாக வேறு இடத்தை, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் தேர்வு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN