Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 15 செப்டம்பர் (ஹி.ச.)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலக்கட்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு 2 நாள் பயணமாக இன்று திருமலை செல்கிறார்.
இன்று மாலை அமராவதியில் இருந்து புறப்படும் அவர், மாலை 5.30 மணிக்கு திருப்பதி வந்தடைகிறார்.
பின்னர் சாலை மார்க்கமாக திருமலை செல்கிறார். இரவு 7.40 மணிக்கு பேடி ஆஞ்சநேயசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து கோவில் மரியாதையுடன் ஊர்வலமாக சென்று, இரவு 7.55 மணி முதல் 9.15 மணிக்குள் மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டுவஸ்திரங்களை சமர்ப்பித்து தரிசனம் செய்கிறார். பின்னர் திருமலையில் இரவு தங்குகிறார்.
மின்சார பஸ்கள் தொடக்கம்
நாளை காலை திருமலையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார். காலை 8.40 மணிக்கு வி.ஐ.பி. கியூ வளாகத்தில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை’ திறந்து வைக்கிறார்.
பின்னர் காலை 9.15 மணிக்கு கோகர்பம் அணை பகுதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் மின்சார பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். காலை 9.35 மணிக்கு நவீனமயமாக்கப்பட்ட எஸ்.வி. அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்துகிறார். அப்போது திருமலையில் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார்.
2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மதியம் 2 மணிக்கு சந்திரபாபு நாயுடு அமராவதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA