Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் விஜய் அவரை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியதோடு, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அண்ணா, தமிழ் மொழி மீதான பற்றால் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டியதுடன், மாநில சுயாட்சிக்கு வித்திட்டதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
“கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” உள்ளிட்ட அண்ணாவின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்கவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் அவரது பிறந்தநாளில் உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam