Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் பிள்ளையார் சிலை ஊர்வல நிகழ்ச்சிகளை அமைதியான முறையில் நடத்துவதற்கும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை அனைத்து வகையான மதுபானக் கூடங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை நிலையங்களான எப்.எல்.1 வகை டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மற்றும் கிளப்புகளில் செயல்படும் எப்.எல்.2 மதுக்கூடங்கள், மற்றும் நட்சத்திர விடுதிகளில் இயங்கும் எப்.எல்.3 வகை மதுபானக் கூடங்கள் அனைத்தும் இந்த ஆறு நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வின் போது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b