Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 செப்டம்பர் (ஹி.ச.)
ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய பாஜக அரசு செய்து வரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை தடுக்கவும், செப்டம்பர் 17-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி மற்றும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செப்டம்பர் 17-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.
ராகுல் காந்தி 2022-23-ம் ஆண்டில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரை காலத்திலிருந்தே ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களின் உண்மையான மக்கள் தொகை, அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார நிலையை அறிந்து கொள்ள நம்பகமான தரவுகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.
ஜாதிவாரி தகவல்களை திறந்த முறையில் பதிவு செய்யாமல், குறிப்பிட்ட பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையில் பதிவு செய்ய வேண்டும் என ராகுல் காந்தி ஆகஸ்ட் 12-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் தொடர் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், நவம்பர் 1-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் தாம், குலாம் அகமது மீர் மற்றும் விஜயசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். முதல் கட்ட பிரச்சாரத்தை நவம்பரில் நிறைவு செய்து, மழைக்காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரியில் ராகுல் காந்தியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பிரம்மாண்ட சமூகநீதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக உறுப்பினர்கள் செய்த அமளியால் தாங்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அந்த விவகாரத்தில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்துள்ள முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளரின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக பேசிய அவர், இதனால் மீனவ மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P