திருவேற்காடு பூங்காவில் கழிவுநீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - தமிழ்நாடு அரசு, திருவேற்காடு நகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
திருவேற்காடு, 15 செப்டம்பர் (ஹி.ச) திருவேற்காடு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காவில் கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் திர
Hi


திருவேற்காடு, 15 செப்டம்பர் (ஹி.ச)

திருவேற்காடு பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காவில் கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதிக்குட்பட்ட பெருமாளகரம் பூங்காவில், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி கழிவுநீரேற்று நிலையம் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி குடியிருப்பு வாசிகளான விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பொதுமக்கள் நடமாடும் பூங்கா பகுதியில் கழிவுநீரேற்று நிலையம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பூங்காவில் கழிவுநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டால் துர்நாற்றம், வாயு கசிவு மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பூங்கா பகுதியில் கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ