Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 செப்டம்பர் (ஹி.ச.)
முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றபோது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10-ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி அவரைக் காண விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல்வர் விஜய் விமான நிலையத்திற்கு வந்தபோது, இருசக்கர வாகனங்கள் அவரது வாகனத்திற்கு குறுக்கே சென்றதாகவும், இதனால் அவரது வாகனம் விமான நிலையத்திற்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் குறைபாடு தொடர்பாக சென்னை விமான நிலைய ஆணையரிடம் விளக்கம் கேட்டு முதல்வர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, விமான நிலைய ஊழியர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சென்னை விமான நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டுப்பாடுகள் போலீசார் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் வாகனங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.
விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட்டு அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் மாறும்போது, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றி அபராதம் வசூலிப்பதாகவும் சில ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam