Enter your Email Address to subscribe to our newsletters

தாராபுரம், 15 செப்டம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுராந்தகம் தனித் தொகுதியில் வழக்கறிஞரும், கழக சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ. பரந்தாமனும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ அவர் மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும், தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு சட்டமன்ற எண்ணிக்கையில் மட்டுமின்றி, தமிழக அரசியலின் அடுத்தகட்ட கூட்டணி வியூகத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து கட்சிகளின் கவனமும் தற்போது இந்த இரு தொகுதிகளை நோக்கி திரும்பியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b