Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை15 செப்டம்பர் (ஹி.ச.)
இணையத்தின் தொடர்பு காரணமாக லேப்டாப் மற்றும் மொபைல் திரைகளிலேயே அதிக நேரத்தை செலவழித்து வரும் இன்றைய காலகட்டத்தில், தொலைக்காட்சி அல்லது தூர்தர்ஷன் இன்னும் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துள்ளது என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் தூர்தர்ஷன் ஒளிபரப்பு தொடங்கியதில் இருந்து, நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்றடைந்த தூர்தர்ஷன் (தொலைக்காட்சி), நவீன உலகின் மிகவும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு ஊடகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
நமது வாழ்க்கையில் தூர்தர்ஷனின் மதிப்பு மற்றும் தாக்கத்தை அங்கீகரிக்கும் நாளாகும். சமூகத்திலும், தனிநபரின் வாழ்க்கையிலும் தூர்தர்ஷன் முக்கிய பங்கு வகிக்கிறது.
தொலைக்காட்சியின் கண்டுபிடிப்பு உலகையே புரட்சிகரமாக மாற்றியதுடன், பொழுதுபோக்கு, கல்வி, செய்திகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கான வெகுஜனத் தகவல் தொடர்பின் சக்திவாய்ந்த ஊடகமாகவும் தூர்தர்ஷன் வளர்ந்துள்ளது.
செப்டம்பர் 15, 1959 அன்று இந்தியாவின் பொது ஒளிபரப்பு சேனலாக 'தூர்தர்ஷன்' (Doordarshan - DD) தனது முதல் பரிசோதனை ஒளிபரப்பை டெல்லியில் தொடங்கியது. இது 'ஆல் இந்தியா ரேடியோ' (All India Radio)வின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இவை பெரும்பாலும் கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த நிகழ்ச்சிகளாக இருந்தன. 1965ஆம் ஆண்டு தினசரி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. பல தசாப்தங்களாக இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி ஒளிபரப்பாளராக இருந்தது.
அன்றிலிருந்து இந்த நிறுவனம் நாட்டின் நீள, அகலத்தை உள்ளடக்கியதுடன், அனைத்து மொழி, புவியியல் மற்றும் கலாச்சார குழுக்களின் நலன்களையும் மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறது. நாட்டின் சமூக, கலாச்சார மற்றும் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பிராந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
இது 'ராமாயணம்', 'மகாபாரதம்', 'ஹம் லோக்', மற்றும் 'புனியாத்' போன்ற புகழ்பெற்ற தொடர்களை ஒளிபரப்பியுள்ளது. இது இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1987-88 காலகட்டத்தில் ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஒளிபரப்பான ராமாயணம் மற்றும் 1988-90 காலகட்டத்தில் பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் ஒளிபரப்பான மகாபாரதக் கதையை யார்தான் மறக்க முடியும்?. இந்தத் தொடர்களுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் இந்தியர்களுடன் சிறப்பான பிணைப்பைக் கொண்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ஆர்.கே.நாராயணின் மால்குடி டேஸ், 1994ஆம் ஆண்டு சந்திரகாந்தா, 1997ஆம் ஆண்டு சக்திமான் ஆகிய தொடர்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றதுடன், அரசுக்கும் அதிக வருவாயை ஈட்டித் தந்துள்ளன.
1965ஆம் ஆண்டு பிரதிமா புரி வாசித்த ஐந்து நிமிட தொலைக்காட்சி செய்திகளுக்காக மிகப்பெரிய மக்கள் கூட்டமே காத்திருந்தது. இதுபோன்ற பல விஷயங்களுடன் இந்தியர்கள் இன்றும் தூர்தர்ஷனின் இனிய நினைவுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
செப்டம்பர் 15, 1959 அன்று இந்திய அரசு, டிடி என்றே பிரபலமாக அழைக்கப்படும் தூர்தர்ஷன் என்ற தேசிய பொது சேவை ஒளிபரப்பை புதுடெல்லியில் தொடங்கியது. இந்தியர்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய பொழுதுபோக்குடன், அறிவையும் உறவுகளையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் மாறியது. இத்தகைய தூர்தர்ஷனுக்கு தற்போது 67வது ஆண்டு கொண்டாட்டம்!
தூர்தர்ஷன் 110 டிடிஹெச் சேவைகளை இலவசமாக வழங்குவதுடன், 36 செயற்கைக்கோள் சேனல்களை நிர்வகிக்கும் நெட்வொர்க்காக வளர்ந்துள்ளது.
தூர்தர்ஷன் - வார்த்தையின் நேரடி அர்த்தத்தில் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு கண்ணோட்டமாக இருந்து வருகிறது.
இது டிஜிட்டல் தகவல் தொடர்பில் உலகளவில் முன்னணி வகித்து, இந்தியாவின் மாற்றத்தின் முகமாக விளங்குகிறது.
இதில் செய்திகள் முதல் கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு, கலை, கலாச்சாரம் மற்றும் பாலிவுட் நிகழ்ச்சிகள், கலை மற்றும் அறிவியல், கல்வி வரை அனைத்தையும் காண முடியும். தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சி, விவசாயம் குறித்த நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தியாவின் 92 சதவீத மக்கள் தொகையை தூர்தர்ஷன் சென்றடைகிறது.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV