Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சியில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்க உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் யாரும் ட்ரோன் கேமராக்களையோ அல்லது ஆளில்லா விமானங்களையோ இயக்கக்கூடாது.
தடையை மீறி யாரேனும் ட்ரோன்களை இயக்கினால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b