திருவாரூரில் அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தது - விவசாயிகள் கடும் வேதனை
திருவாரூர், 15 செப்டம்பர் (ஹி.ச) திருவாரூர் மாவட்டம் எட்டியலூர், பெரும்புகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால் பயிர்க
திருவாரூரில்  அறுவடைக்கு தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் கடும் வேதனை


திருவாரூர், 15 செப்டம்பர் (ஹி.ச)

திருவாரூர் மாவட்டம் எட்டியலூர், பெரும்புகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால் பயிர்கள் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடை செய்யலாம் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், முற்றிய நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் சாய்ந்தன. குறிப்பாக எட்டியலூர், பெரும்புகலூர் பகுதிகளில் மட்டும் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நீரில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்கும் அபாயம் உள்ளதாலும், அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பலர் வங்கிகளில் கடன் பெற்று சாகுபடி செய்திருந்ததால், இந்த சேதம் அவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வேளாண்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சேதத்தை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b