Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 15 செப்டம்பர் (ஹி.ச)
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கடக்கம்பாடி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வயல்களிலும், சாலையோரங்களிலும் அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருவதாகவும், இதனால் கடும் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டித்தும், உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடக்கம்பாடியில் திரளான விவசாயிகள் கும்பகோணம் - காரைக்கால் - மயிலாடுதுறை பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு எதிராகவும், கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி நடைபெற்று வரும் விவசாயிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b