Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 செப்டம்பர் (ஹி.ச)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கான 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் இத்தொகுதி காலியானது.
இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 17-ம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் செப்டம்பர் 19-ம் தேதியும் வெளியிடப்பட உள்ள நிலையில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் ஆகிய இருவரும் இன்று (செப்டம்பர் 15) தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.
இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே நாளில் மனுத்தாக்கல் செய்வதால் மதுராந்தகத்தில் இன்று அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும், திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக முன்னாள் திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் திரளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான கணிதா சம்பத் நாளை காலை 11 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இவர், ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b