Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 15 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியா-சீனா எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ஏராளமான படைகளை குவித்தன.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இந்த பதற்றத்தை தணித்து எல்லையில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும், சிறப்பு பிரதிநிதிகள் மட்டத்திலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக இருதரப்பு உறவிலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அதன்பிறகும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைகளில் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை குறைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
இதன் விளைவாக, வடக்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து சீனா கடந்த ஆண்டே கணிசமான அளவு படைகளை குறைத்துள்ளதாக மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சீனாவின் பாரம்பரிய பயிற்சிப் பகுதிகளில் 10 ஒருங்கிணைந்த ஆயுதப்படைப் பிரிவு அளவிலான படைகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
அதே நேரத்தில், எதிர்பாராத எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் அனைத்து நிலைகளிலும் வலுவாகவும், நன்கு சமநிலையுடனும் தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA