திருப்புவணம் அருகே அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் வீட்டில் 126 பவுன் நகை, ரூ.1.60 லட்சம் கொள்ளை
சிவகங்கை, 15 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகேயுள்ள மணலூர் ஜெயபாரத் மெட்ரோ சிட்டி பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர் கொந்தகை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபு மதுர
கொள்ளை


சிவகங்கை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகேயுள்ள மணலூர் ஜெயபாரத் மெட்ரோ சிட்டி பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி.

இவர் கொந்தகை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபு மதுரையில் காப்பீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபுவின் மாமனார் மதுரையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக மகேஸ்வரி, அவரது மகன் பிரபு மற்றும் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு மதுரைக்குச் சென்றுள்ளனர்.

நிகழ்வுகள் முடிந்து நேற்று இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 126 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருப்புவணம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P