Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 15 செப்டம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் எனப்படும் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகன் சன்னதியில் நடைபெற்று வரும் உற்சவத்தின்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சன்னதியில் கடந்த இரண்டு நாட்களாக உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு உற்சவத்தின்போது திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நடைபெறும் உற்சவங்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam