Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 15 செப்டம்பர் (ஹி.ச.)
கர்நாடக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடந்த செப்டம்பர் 8-ம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தவிர, மற்ற அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் கிரீஷ் பரத்வாஜ் சார்பில், வழக்கறிஞர் அங்கத் காமத் மூலம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைப் பட்டியலில் சேர்ப்பதற்காக குறிப்பிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் தொடர்பாக மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறையுடன் கர்நாடக அரசின் உத்தரவு முரண்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடைமுறையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு 6 சரணங்களும் இடம்பெறும் நிலையில், மாநில அரசு தனது நிர்வாக உத்தரவு மூலம் முதல் 2 சரணங்களை மட்டும் பாட வேண்டும் என கட்டுப்படுத்த முடியுமா என்ற சட்டக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், தேசியப் பாடல் தொடர்பான விவகாரம் மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகார வரம்புக்குள் வராது என்றும், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயத்தில் மாநில அரசு அரசாணை மூலம் தனிப்பட்ட நடைமுறையை வகுக்க முடியாது என்றும் மனுவில் வாதிடப்பட்டுள்ளது. இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 248-வது பிரிவு மற்றும் ஒன்றியப் பட்டியலின் 97-வது பதிவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அரசமைப்புச் சட்டத்தின் 19(1)(a), 256 மற்றும் 257-வது பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவையின் செப்டம்பர் 3-ம் தேதி முடிவு முறையான அமைச்சரவை குறிப்பு மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதனால், தேசியப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் எவ்வாறு பாட வேண்டும் என்பதில் மாநில அரசுக்கு தனியாக விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் உள்ளதா, மத்திய அரசின் நடைமுறைக்கு மாநில அரசின் உத்தரவு முரண்படுகிறதா என்பது உள்ளிட்ட முக்கியமான அரசமைப்புச் சட்டக் கேள்விகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் எழுந்துள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P