Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கான குடமுழுக்கு செப்டம்பர் 16-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மாபெரும் திருப்பணிக்காக கோயில் நிதியிலிருந்து ரூ.15.40 கோடி ஒதுக்கப்பட்டு 86 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உபயதாரர்கள் வழங்கிய நிதியான ரூ.16.89 கோடியில் 100-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் ரூ.32.29 கோடி மதிப்பீட்டில் திருக்கோயிலின் அனைத்து திருப்பணிகளும் முழுமையாக செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படுகிறது என்று அமைச்சர் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.
குடமுழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அவசர காலத்திற்கு தேவையான மருத்துவ உதவி மையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக பிரசாதப் பைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b