Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து வாரியத் தலைவர் சிவா ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதுரை மாவட்ட தலைமை அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தற்போது செயல்பாட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத் திட்டங்கள், திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை, நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டறியப்பட்டது.
மேலும், அலுவலக நிர்வாகத்தில் உள்ள குறைகள் மற்றும் சவால்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்கள் வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், தரமான முறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத் திட்டங்களை நேரில் ஆய்வு செய்து, அவற்றின் முன்னேற்றம் மற்றும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக வாரியத் தலைவர் வே. சிவா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ