Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தயக்கம் காட்டுவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிடுவதிலும் ஒன்றிய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டிலேயே தீர்ப்பளித்துள்ள நிலையிலும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், 28 சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட்ட ரூ.35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்ததுடன், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்திய ஒன்றிய அரசு, தற்போது சாதிவாரி கணக்கெடுப்பில் ஓபிசி மக்களின் விவரங்களைத் துல்லியமாக சேகரிக்காமல் திறந்தவெளிப் பதிவு முறையை பின்பற்றுவது திட்டமிட்ட குளறுபடியாகும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமே சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையை துல்லியமாகக் கண்டறிவதாக இருக்கும் நிலையில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தெளிவான பட்டியல்கள் இருக்கும் போது, ஓபிசி சாதி விவரங்களை மட்டும் முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல் திறந்தவெளி முறையில் சேகரிப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் 220-க்கும் மேற்பட்ட ஓபிசி சாதிகள் உள்ள நிலையில், துல்லியமான சாதிப் பட்டியலை வழங்காமல் பொதுவான கேள்வியாக சாதிப் பெயரை பதிவு செய்வது மிகப்பெரிய குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் மிகப்பெரிய கணக்கெடுப்பு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல் தவறுகளை கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது பகல் கனவு என்றும், ஒரு சிறிய எழுத்துப் பிழைகூட ஒரு சமூகத்தின் பெயரை வேறொரு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தெளிவான கீழிறங்கும் பட்டியல் முறையை தவிர்த்துவிட்டு திறந்தவெளிப் பதிவு முறையைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையையே பாதிக்கும் என்றும், இதன் மூலம் உண்மையான ஓபிசி எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டு எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டு உரிமையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைக்கக் கூடாது என்பதும், ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கை வெளிவரக் கூடாது என்பதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டமிட்ட நோக்கம் எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் செயல்படுவதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
துல்லியமற்ற சாதிவாரி தரவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 69 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் தலைவர் டி.ஏ. நவீன் ஒருங்கிணைப்பில் மாநிலம் தழுவிய களப்பிரச்சாரக் கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் தனது தலைமையில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பயணத்தை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, சிவகாசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு ஆகிய 10 நகரங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் நேரடி செயல்விளக்கக் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திறந்தவெளிப் பதிவு முறையால் உருவாகும் குளறுபடிகளையும், காங்கிரஸ் முன்வைக்கும் சரிபார்க்கப்பட்ட கீழிறங்கும் பட்டியல் முறையின் மூலம் நம்பகமான சமூகநீதித் தரவுகளை பெற முடியும் என்பதையும் இந்த நிகழ்வுகளில் செயல்விளக்கம் மூலம் எடுத்துக்காட்ட உள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு பெயரளவில் கண்துடைப்பாக நடத்தப்படக் கூடாது என்றும், அது நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய மக்களின் உரிமைகளை முடக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள குறைபாடுள்ள வினாத்தாளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட சாதிப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முறையான வினாத்தாளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கைக்காக நடத்தப்படுவது அல்ல; அது சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ