Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை வி.எம்.சத்திரம் பிரியாணி கடையின் விளம்பரம் அண்மையில் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து,அதன் உரிமையாளர் ஜெயந்த் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில்,
ஜெயந்த் பிறப்பால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்.மதத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற எந்தவிதமான உள்நோக்கமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
இந்தியா முழுவதும், குறிப்பாக விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில், கடவுள்களை பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு காட்சியமைப்புகளிலும் வெளிப்படுத்துவது அண்மைக்காலமாக இருந்து வரும் ஒரு கலாச்சார நடைமுறையாகும்.
அத்தகைய பொதுவான கலாசார வெளிப்பாட்டை,ஒருவருடைய சொந்த வாழ்வியல்,உணவு மற்றும் பண்பாட்டின் இயல்பான வெளிப்பாடாக அவர் சித்தரித்த ஒரு விஷயத்தை, திட்டமிட்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகப் பொருள் கற்பித்து, மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றுவதும்,அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்வதும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.
மனிதர்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக இடம்பெறும் ஒரு விஷயத்தைக்கூட மத அரசியலின் கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்தப் போக்கு எதிர்காலத்தில் தீவிரமான நிலைக்குச் செல்லக்கூடிய ஆபத்து உள்ளது, எந்தவொரு இயல்பான வெளிப்பாட்டையும் குற்றமாக்கும் சூழலை உருவாக்கக்கூடும்.
எனவே, இதுபோன்ற சிறிய சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கி, தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் மத அமைப்புகளின் போக்கை அரசு ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது.
மாறாக,மத நல்லிணக்கத்தையும், கருத்து மற்றும் கலாசார வெளிப்பாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
ஒரு செயலைக் குற்றமாகக் கருதுவதற்கு முன்பு, அதற்குப் பின்னால் உண்மையான உள்நோக்கம் இருந்ததா என்பதையும், அந்தச் செயல் உண்மையில் யாருடைய மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதையும் நிதானமாகப் பரிசீலிப்பது அவசியம்.
ஆகையால்,ஜெயந்த் மீதான நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது என்று பதிவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN