பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் - அரசாணைக்கு எதிராக 9 மீனவ கிராமங்கள் இன்று கலந்தாய்வுக் கூட்டம்
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக அரசு கடந்த செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வெளியிட்ட அரசாணையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய 25.55 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் - அரசாணைக்கு எதிராக 9 மீனவ கிராமங்கள் இன்று கலந்தாய்வு


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக அரசு கடந்த செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வெளியிட்ட அரசாணையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய 25.55 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றக் கட்டிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் அமைய உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பட்டினப்பாக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமிங் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மொத்தம் 9 மீனவ கிராமங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க, சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களின் பிரதிநிதிகள் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

முள்ளிக்குப்பம் சமூக நலக்கூடம் அருகே நடைபெறும் இந்த கூட்டத்தில் எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார் குப்பம் வரையிலான அனைத்து மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்க உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த, குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b