Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு அப்பகுதி மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.
கடற்கரையை ஒட்டியுள்ள அந்த பகுதியில் தலைமைச் செயலகம் வந்தால், பாதுகாப்பு காரணங்களை காட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பட்டினப்பாக்கத்தின் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் யோசிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். ஏற்கனவே கடற்கரை சாலையில் கடுமையான வாகன நெரிசல் நிலவி வரும் நிலையில், தலைமைச் செயலகம் அங்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்தார்.
தலைமைச் செயலகத்தை எப்படியாவது கட்டியே தீருவேன் என்று முதலமைச்சர் பிடிவாதம் பிடித்தால், அதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறிய ஜெயக்குமார், அதற்கு பதிலாக சென்னைக்கு வெளியே ஒரு துணைக்கோள் நகரத்தை அமைத்து அங்கு தலைமைச் செயலகத்தை கட்டலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள பகுதி என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், ஏற்கனவே ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாறியது போல, இந்த புதிய தலைமைச் செயலகமும் மீண்டும் ஒரு மருத்துவமனையாகத்தான் மாறும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b