பழனி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
திண்டுக்கல், 15 செப்டம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன கலையம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கே. மில்ஸ், கோபாலபுரம், சின்னகலையமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக
Water demand


திண்டுக்கல், 15 செப்டம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்ன கலையம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கே. மில்ஸ், கோபாலபுரம், சின்னகலையமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், காலி குடங்களுடன் பழனி–உடுமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கூலி வேலைக்கு செல்லும் தங்களால் தொடர்ந்து தண்ணீரை விலைக்கு வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், வேலைக்கு செல்பவர்களை குறித்த நேரத்தில் அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுவதாக கூறிய பெண்கள், பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் பழனி–உடுமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN