Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 15 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தின்போது, தங்கள் தெருவுக்குள் விநாயகர் சிலை முழுமையாக வரவில்லை என ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி ஆலயத்தில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 11.30 மணியளவில் வெங்கடேஸ்வரா நகர் 13-வது தெருவில் பாதி தூரம் வரை சென்ற ஊர்வலம், பின்னர் மற்றொரு தெருவுக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த தெருவில் வசித்து வந்த சிலர் விநாயகர் சிலை ஊர்வலத்தை தங்கள் தெருவுக்குள் முழுமையாக அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் வெங்கடேஸ்வரா நகர் 2-வது பிரதான சாலையில் வசிக்கும் அனீஸ் என்பவரது வீட்டுக்கு புவனேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அனீஸை வீட்டில் இருந்து கீழே வருமாறு அழைத்து, அவரை கையால் தாக்கியதாக தெரிகிறது.
அப்போது அங்கிருந்த எம்.டி.சி. பேருந்து ஓட்டுநரான சீனிவாசன் (44) என்பவரையும் ஆனந்த் என்பவர் மார்பில் வேகமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் சுயநினைவின்றி கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமாபுரம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam