Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த ஜூன் 8-ம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில்,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்று தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த பதிவு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், உண்மைக்கு புறம்பானது என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில், ஜான் பிரிட்டோ என்பவர் தனது உறவினர் அல்ல என்றும், இதே பெயர் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ தனியாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து, அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஜான் பிரிட்டோ தான் இல்லை என விளக்கம் அளித்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தன்னைப் பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய அந்த சமூக வலைதளப் பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இதனை கேட்டறிந்த நீதிபதி, இந்த மானநஷ்ட வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b