Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட 17 புகார்களின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் ஜி. சந்திரபோஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகள் தொடர்பாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகளை நீக்குவது மற்றும் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரிவான நடைமுறை வகுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடும் நபர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி வி. லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ