Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் உள்ள 25 உறுப்பினர் பதவிகளில், 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர்த்து 23 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்ட நிலையில், பார் கவுன்சில் முன்னாள் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட 23 பேர் வெற்றி பெற்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பார் கவுன்சிலின் நியமன பெண் உறுப்பினர்களாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பார் கவுன்சில் உறுப்பினர்கள் மூலம் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.
பிற்பகல் 1 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைவர் பதவிக்கு கே.கதிரவனும், துணைத் தலைவர் பதவிக்கு இ.பாலமுருகனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு பி.எஸ்.அமல்ராஜும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனால், மூன்று பதவிகளுக்கும் போட்டி இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தேர்தல் அதிகாரியான நீதிபதி கே.என்.பாஷா, கே.கதிரவன், இ.பாலமுருகன் மற்றும் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக கே.கதிரவனும், துணைத் தலைவராக இ.பாலமுருகனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக பி.எஸ்.அமல்ராஜும் பதவியேற்க உள்ளனர்.
பார் கவுன்சில் வரலாற்றில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் மூலம் போட்டியிடாமல், ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P