போலீஸ் நிலையத்திலேயே 15 பேர் கும்பல் தாக்குதல் கே.டி.ஆர். பரபரப்பு குற்றச்சாட்டு
ஐதராபாத் , 15 செப்டம்பர் (ஹி.ச.) ஐதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலைய வளாகத்தில் தனது பி.ஆர்.ஓ. மகேஷ் மாணிக் மற்றும் பி.ஏ. மகேந்தர் ரெட்டி ஆகியோரை முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். குற
A


ஐதராபாத் , 15 செப்டம்பர் (ஹி.ச.)

ஐதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸ் நிலைய வளாகத்தில் தனது பி.ஆர்.ஓ. மகேஷ் மாணிக் மற்றும் பி.ஏ. மகேந்தர் ரெட்டி ஆகியோரை முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கூறியதாவது:-

சைதாபாத் போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையிலேயே முகமூடி அணிந்த 15 பேர் உள்ளே புகுந்து, திட்டமிட்டு எனது பி.ஆர்.ஓ. மற்றும் பி.ஏ.வை தாக்கியுள்ளனர்.

இது தெலுங்கானாவில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு தெளிவான எடுத்துக்காட்டு.

சட்டசபை வாசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்த போதிலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக விசாரணை என்ற பெயரில் இருவரையும் அதிகாலையிலேயே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, இரவு வரை காலதாமதம் செய்துள்ளனர்.

அதன்பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? அல்லது போலீசாரே மாறுவேடத்தில் வந்து தாக்குதல் நடத்தினார்களா? என்பது குறித்து உண்மை வெளிவர வேண்டும். எனவே, பதவியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், போலீஸ் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்த தனது ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

முதல்-மந்திரியும், உள்துறை அமைச்சருமான ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் தெலுங்கானா ரவுடிகள் ராஜ்ஜியமாக மாறிவிட்டதாகவும் கே.டி.ஆர். கடுமையாக விமர்சித்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ‘எக்ஸ்’ தளத்தில் டேக் செய்த கே.டி.ஆர்., ‘வெல்டன் காங்கிரஸ்’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA