ஊழியர்களுடன் மோதும் அரசுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை - டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கவிதா
ஐதராபாத் , 15 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானாவில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தி வருவதாகவும், அவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் அரசுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பதால் அடுத்த தேர்தலில் காங்க
A


ஐதராபாத் , 15 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானாவில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தி வருவதாகவும், அவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் அரசுகள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பதால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அரசு தோல்வியடைவது உறுதி என்றும் தெலுங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்குந்த்ல கவிதா கூறினார்.

ஐதராபாத் பாக் லிங்கம்பள்ளியில் ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சிறுமைப்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு முன்பு ஊதிய திருத்த ஆணையம் (பி.ஆர்.சி.), அகவிலைப்படி (டி.ஏ.) வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டத்தையும் அரசு சிறப்பாக செயல்படுத்த முடியாது.

தெலுங்கானா மாநில போராட்டத்தின்போது ஆசிரியர்கள் தங்கள் பணியைவிட போராட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து பங்கேற்றனர். ஆனால், தற்போது 630 மண்டலங்களுக்கு 8 நிரந்தர மண்டல கல்வி அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இது கல்வித்துறையின் மீதான அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

மாணவர்களின் விவரங்கள் மற்றும் பல்வேறு அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், அவர்கள் கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் பள்ளிகளின் நிலைமை மேலும் மோசமாக உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களை மாநில வளர்ச்சியின் முக்கிய பங்குதாரர்களாக கருதி, அவர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும்.

இவ்வாறு கவிதா கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA