மீட்கப்பட்ட ஐந்து குட்டி உராங்குட்டான்களும் நலமாக உள்ளன - நந்தன்கானன் உயிரியல் பூங்கா தகவல்
பாதாபள்ளி, 15 செப்டம்பர் (ஹி.ச.) ஒடிசாவின் பாதாபள்ளி கிராமத்திற்கு அருகே மீட்கப்பட்ட ஐந்து குட்டி உராங்குட்டான்களும் சீராக உணவு உட்கொண்டு நல்ல நிலையில் இருப்பதாக புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் இன்று தெரிவித்தா
மீட்கப்பட்ட ஐந்து குட்டி உராங்குட்டான்களும் நலமாக உள்ளன - நந்தன்கானன் உயிரியல் பூங்கா தகவல்


பாதாபள்ளி, 15 செப்டம்பர் (ஹி.ச.)

ஒடிசாவின் பாதாபள்ளி கிராமத்திற்கு அருகே மீட்கப்பட்ட ஐந்து குட்டி உராங்குட்டான்களும் சீராக உணவு உட்கொண்டு நல்ல நிலையில் இருப்பதாக புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் இன்று தெரிவித்தார்.

பூங்காவின் கால்நடை மருத்துவப் பிரிவு நடத்திய மருத்துவ பரிசோதனையில், மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் குட்டிகள் உட்பட ஐந்து குட்டிகளும் தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றத்துடன் பதிலளித்து வருவது தெரியவந்தது.

நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட வெப்ப பரிசோதனையில் அவற்றின் உடல் வெப்பநிலை 98.2°F முதல் 99.0°F வரை இருந்தது, இது இயல்பான அளவிற்குள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எடை பரிசோதனையில் முதல் ஆண் குட்டி 4.990 கிலோவும், இரண்டாவது ஆண் குட்டி 3.470 கிலோவும், மூன்றாவது ஆண் குட்டி 2.850 கிலோவும் இருந்தது. பெண் குட்டிகள் முறையே 4.130 கிலோ மற்றும் 2.080 கிலோ எடை கொண்டிருந்தன.

ஐந்து குட்டிகளும் சீரான முறையில் உணவு உட்கொள்வதுடன், உடல் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்த உராங்குட்டான்கள் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி காலை பாலாசோர் வனக்கோட்டத்தின் போக்ராய் வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்டன.

காலை சுமார் 6 மணியளவில் வன பாதுகாப்பு சங்க உறுப்பினர் ஒருவரிடமிருந்து குரங்குகள் போன்ற ஐந்து விலங்குகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பார்பை கிராமத்திற்கு அருகே சென்று ஆய்வு செய்தபோது அவை உராங்குட்டான்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடக்கத்தில் அந்த இடத்திலேயே அவற்றுக்கு உணவளிக்கப்பட்ட நிலையில், கூட்டம் கூடியதை அடுத்து முறையான பரிசோதனைக்காக உதய்பூர் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த குட்டி உராங்குட்டான்கள் நடமாடுவதில் சிரமம் கொண்டிருந்ததாகவும், அப்பகுதியில் நரிகள், குள்ளநரிகள், நாய்கள் மற்றும் கருங்குரங்குகள் போன்ற வேட்டை விலங்குகள் இருப்பதால் இரவு முழுவதும் தாக்குப்பிடிப்பதோ அல்லது வெகு தொலைவு பயணிப்பதோ கடினமாக இருந்திருக்கும் என்று பாலாசோர் கோட்ட வன அதிகாரி இந்தல்கர் பிரதிக் பிரகாஷ் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறை, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை, இந்திய வனவிலங்கு அறக்கட்டளை மற்றும் நந்தன்கானன் உயிரியல் பூங்கா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பிற முகமைகளுடன் ஒருங்கிணைந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b