நீண்ட இடைவெளிக்கு பின்னர் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
தேனி, 15 செப்டம்பர் (ஹி.ச) தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவி விளங்குகிறது. பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கா
நீண்ட இடைவெளிக்கு பின்னர்  கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி


தேனி, 15 செப்டம்பர் (ஹி.ச)

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கும்பக்கரை அருவி விளங்குகிறது. பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி.

கொடைக்கானல் மலையில் உற்பத்தியாகி வரும் இந்த அருவி, தேனி மாவட்டத்தின் வற்றாத சுற்றுலா தலமாக விளங்குகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மழை பொய்த்ததன் காரணமாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் அருவியில் தண்ணீர் இல்லாமல் பாறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது. நீர்வரத்து சீரானதை அடுத்து வனத்துறையினர் ஆய்வு செய்து, தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கியுள்ளனர்.

நூறு நாட்களுக்குப் பிறகு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.

இருப்பினும், பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும், பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b