காவிரி படுகையில் 5 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி கூடாது - வைகோ
சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச) காவிரி படுகையில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெ
Vaiko


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)

காவிரி படுகையில் புதிதாக 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் கடலோரப் பகுதியில் உள்ள காவிரி படுகையில் CY-OS/90/1 என்ற தொகுதியில் PY-3 என்ற எண்ணெய் பகுதியில் ஹார்டி எக்ஸ்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தொகுதி, ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது PY-3 பகுதியில் முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிதாக 5 கிணறுகள் அமைக்க அனுமதி கோரி, ஹார்டி எக்ஸ்புளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் கடிதம் அளித்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் கிணறுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ கார்பன் கடல்வழிக் குழாய்கள் மூலம் மிதக்கும் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி கப்பலுக்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிப்பு மற்றும் சேகரிப்புக்குப் பின்னர் கப்பல்கள் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை என்றும், கடற்கரையோர வசதிகள் எதுவும் தேவையில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கோரப்பட்டுள்ள அனுமதியை ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகள், கடல் பகுதிகள் மற்றும் வேளாண் நிலங்களில் பல்வேறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு உரிமம் வழங்கியிருந்தாலும், மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் எதிர்ப்பால் கடந்த காலங்களில் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

அதே நிலைப்பாடு தற்போதும் தொடர வேண்டும் என்றும், சுற்றுச்சூழல், கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ