Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகப் பெருமானின் சிலையை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்து காட்சிப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் என விமர்சித்துள்ளார்.
மேலும், புனிதமான விநாயகர் சதுர்த்தி விழாவை அரசியல் சுயலாபத்திற்கான மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் செயல்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் மேற்கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற செயல்களை அக்கட்சியின் தலைவர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இறை உருவங்களை சுய விளம்பரத்திற்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P