பள்ளி அருகே கால்சைட் குவாரி அமைக்க எதிர்ப்பு - அருப்புக்கோட்டை அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
விருதுநகர், 15 செப்டம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே தனியார் கால்சைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்


விருதுநகர், 15 செப்டம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே தனியார் கால்சைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குருந்தமடம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே தனியார் நிறுவனம் சார்பில் கால்சைட் குவாரி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குவாரியில் பாறைகளை உடைக்க வெடி பொருட்கள் பயன்படுத்தப்படும்போது பள்ளிக் கட்டிடம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் எனவும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே குருந்தமடம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ள நிலையில், குவாரி அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் தேவைகள் மேலும் பாதிக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குருந்தமடம் கிராம எல்லையில் சாலையில் அமர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவர்களும் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எனினும், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கால்சைட் குவாரி அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam