தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவதாக மோசடி புகார் - அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை
திருச்சி, 16 செப்டம்பர் (ஹி.ச.) தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் சென்னை மத்திய க
அன்பில் மகேஷ்


திருச்சி, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அன்பில் மகேஷ் தொடர்புடையதாகக் கூறப்படும் மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தைச் சேர்ந்த அரசகுமார் என்பவர் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சுமார் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை முதல் நடைபெற்று வரும் சோதனையில் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. சோதனை முடிவடைந்த பின்னர் இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam