Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 16 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நெல்லூர் நகரில் நவீனமயமாக்கப்பட்ட 2 அரசு பள்ளிகளை மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் திறந்து வைத்தார்.
முதலில் ஸ்டோன்ஹவுஸ்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.ஆர். மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியை அவர் திறந்து வைத்தார். எம்.பி. வேமிரெட்டி பிரபாகர் ரெட்டியின் விபிஆர் அறக்கட்டளை சார்பில் ரூ.8.3 கோடி சி.எஸ்.ஆர். நிதியில் இந்த பள்ளி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
2 மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் 43 வகுப்பறைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்பறையிலும் டிஜிட்டல் கற்பித்தலுக்கான எல்.இ.டி. திரைகள் மற்றும் நவீன மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் வகையில் கணினி, ரோபோட்டிக்ஸ், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கலை, இசை, நடன அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
கால்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன் விளையாடுவதற்கான வசதிகளுடன், சுமார் 21 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செயற்கை விளையாட்டு மைதானமும், திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் லோகேஷ், வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் உணவு அரங்கத்தை பார்வையிட்டார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மதிய உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
மற்றொரு பள்ளியும் திறப்பு
இதைத்தொடர்ந்து மூலப்பேட்டை 39-வது வார்டில் ரூ.13.4 கோடி சி.எஸ்.ஆர். நிதியில் நவீனமயமாக்கப்பட்ட தேவரெட்டி சாரதா (டி.எஸ்.ஆர்.) அரசு உயர்நிலைப்பள்ளியையும் அமைச்சர் லோகேஷ் திறந்து வைத்தார்.
பின்னர் ஆர்.எஸ்.ஆர். பள்ளியின் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் லோகேஷ் ஆய்வு நடத்தினார். அப்போது, பள்ளிகளுக்கு நவீன கட்டிடங்கள் அமைப்பது மட்டுமே போதாது என்றும், கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி சதவீதமும் தொடர்ந்து உயர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 60.19 ஆக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை கேட்டறிந்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.நாராயணா, நெல்லூர் எம்.பி. வேமிரெட்டி பிரபாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, இந்தூரி நாகேஸ்வரராவ் மற்றும் தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA