மின்கட்டணத்தை இருமடங்காக உயர்த்துவதா? தொடர் மின்வெட்டு ஏன்? – தவெக அரசுக்கு அப்பாவு கேள்வி
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு தொடர்பாக தவெக அரசை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில
Appavu


Hh


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு தொடர்பாக தவெக அரசை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்தடையோ, மின்வெட்டோ, அதிக அளவிலான மின்கட்டண உயர்வோ இல்லாமல், காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்கள் மூலம் சுமார் 15,000 மெகாவாட் புதிய மின் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் வீட்டு மின்பயன்பாட்டில் முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.35 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சியில் அது இருமடங்காக ரூ.4.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தங்களுக்கு வாக்களித்த ஏழை, எளிய மக்களிடம் மின்கட்டண உயர்வு மூலம் கூடுதல் சுமையை ஏற்படுத்துவது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்கள் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையில் தயாராக இருப்பதாகவும், அதனை மின் வாரியம் கொள்முதல் ஒப்பந்தம் மூலம் வாங்குவதற்கு அரசு அனுமதி அளிக்காமல் இருப்பதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாநிலத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக ஆட்சியில் செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்படுவதாகவும், மணல் மற்றும் கனிம வளங்களைப் போலவே மின்வாரியத்தையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயற்சி நடைபெறுவதாகவும் அப்பாவு தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் தூய ஆட்சியின் லட்சணமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ