Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய பொதுநல வழக்கை, ஏற்கனவே இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது போன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக்குகின்றன என்றும், இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பதவி விலகுபவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதைத் தடுப்பது தொடர்பாக இதுவரை உரிய வழிமுறைகள் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து உரிய வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இடைத்தேர்தல் நடத்துவதற்கான செலவுகளை பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து வசூலிக்கும் வகையில் நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் பதவி விலகுபவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டிருந்தது.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
ஆனால், இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பான வழக்குகள் ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam